புதன், 8 ஏப்ரல், 2009

1. ஆவணித் திருவிழா

கற்றோர் போற்றும் கவிநாடு! - கல்வி
கல்லார் இல்லாத் திருநாடு!
வென்றார் தங்கும் மறநாடு! - மனங்
குன்றார் பொங்கும் உயர்நாடு!!
எந்நாட்டவரும் போற்றும்
தென்னாடு கண்ட அம்மை
தன்னொடு அப்பனும் ஆண்ட பெருநாடு!!
உக்கிர தேவனெனுந் தமிழப்பனும்
உயர்வெனக் கொண்ட பாண்டிமாநாடு!!

தென்பாண்டி நாட்டினிலே
தெங்கின் மரச் சோலையொன்றுண்டு!
ஆங்கே....
தென்னவர் புகழ் பாடும்
தெம்பனைக் காடுகளு முண்டு!!
சோலைவனஞ் சூழ்ந்த அச்
சுந்தர ஊருக்கு
சுப்பிர மணிய புரமென்று பெயராம்.!
எல்லைக ளெல்லாம்
எழில்மிகு ஊற்றாங் கரைகள்.!
கண்கவர் வண்ண மயில்கள்
காலோச்சும் சோலைவனங்கள்!!
விண்ணவர் ஏங்கிடும்
வித்தக பூமி!
மண்ணவர் தேடிடும்
மங்கல பூமி!!
மறுமுறை பிறந்திடில்
மறவாது இவ்விடம் பிறக்க அருள்செய்யென
மன்னவரெலாம் விழைந்திட்ட பூமி!!

சுப்பிரமணியபுர மொரு
சுந்தரக் களஞ்சியம்.
மண்ணுக்கெனத் தன்னையே தரும்
மறவர்கள் நிறையூர்!.
எண்ணுதற் கியலா
வண்ணமொழி பேசும்
தென்னவரின் கலையூர்!

வடலடியா னென்ற
வலியதொரு காவல் தெய்வம்
வடவெல்லையில் கோயில் கொண்டான்.
நெஞ்சத் திருள் கொண்ட
வஞ்சகரை
வஞ்சமின்றி வீழ்த்திடுவான்
தஞ்சமென்று வந்தவர்க்கு
வெஞ்சரங்கள் வீசிடுவான்.
வடலடியான் காவலாலே
வஞ்சகங்கள் அங்கில்லை..

நகரத்தின் மையத்திலே
நாராயணன் பள்ளி கொண்டான்.
கீழ்த் திசை நோக்கியதால் அவனை
கிழக்குதித்த பெருமாள் என்பார்.

மேலெல்லையில் அன்னை
முத்தாரம்மை
வித்தாரக் கோயில் கொண்டாள்.
ஆவணி மாதத்திலே
அன்னைக்குத் திருவிழா!
இன்று
இரவு அவள் உற்சவமாம்.!
உற்சவம் காண
ஊரெங்கும் வண்ணத் தோரணங்கள்.!
பகலையும் விஞ்சும்
பஞ்சுத் தீவண்ணங்கள்..!!

வேப்பிலையில் கொடிகட்டி
வேதியர்கள் மறையோத
தமிழறிந்த புலவ ரெலாந்
தனித் தனியே யிசைபாட
ஒயிலாட்டம் வண்ண
மயிலாட்டம் தங்கக்
கரகாட்ட மென
நோக்கு மிடமெலாம்
பாட்டும் கூத்தும் காணீர்!!

சீரன்னையை நீராட்ட
சீரலைவாய் நீர்கொண்டு
ஆனை மீதேறி
அரச மகன் வருகின்றான்.
வண்ண நகரி தனை
வள்ளலவன் வலம் வரவும்
வெற்றி வெற்றி யென
வேங்கையர்கள் புடைசூழ
மறையோ னொருவன் வந்து
மாவிலைகள் கைக்கொண்டு
மன்னன் கரத்திருந்த
மாசற்ற பொற்குடத்தை
எண்ணத்திற் அன்னையை வைத்து
கண்ணெனவே கொண்டு சென்றான்.

"அன்னையை அலங்கரிக்க
இன்னமும் நேரமுண்டு
மன்னவர் அந்நேரம் வரை
மயிலாட்டம் காணலாமே1"
அமைச்சர் குரல் கொடுக்க.
"என்னம்மைக் கினிதான
கரகாட்டம் காணுவோம்"
மன்னவன் பதிலுரைத்தான்.

தமிழர் கலையாம்
தன்னிகரிலாக்
கரகாட்டம் துவங்க...
நையாண்டி மேளமிசை பாட
நாதசுரத்தார் நல்லிசை ஊத..
கன்னியவள் முன்வந்து
களிநடனம் புரிந்தாள்.
"பகைவென்று பகைவர்
சிகை கொண்ட
சிங்கவேல் பாண்டிய மன்னா!
வகையோ ராயிரம் உண்டு நின்
வாழ்த்தினை யாம்பாட..
பாண்டவர்க்கு மூத்தவனை
பாண்டிய நாடு காண
என்ன தவம் செய்து விட்டோம்
எங்களன்புத் தலைவ வாழி!"
ஆடலுடன் பாடலும் தந்த
ஆரணங்கு அசந்து போக
முத்துமாலை பரிசளித்தான்
முத்தமிழர் தலைவனவன்.

நடுநிசி யானது கண்டு
நான்மறை ஓதுவார் வந்து
உற்சவம் காணலா மென்க
அன்புடனே தலைவ னெழ
ஆரவாரம் விண்ணெழுந்தது..

மேளங்கள் முழங்கி வர
மேலான பட்டுடுத்தி
முத்தார தேவியவள்
முறுவலுடனே புறப்பட்டாள்.

தேரின் வடம் பிடித்துத்
தென்னவன் முன்னிழுக்க
"தாயே முத்தாரமம்மா!
தரணியைக் காப்பாத்தம்மா!!"
விண்ணெட்டும் ஒலி எழுப்பும்
கண்கொள்ளாக் காட்சியது.

ஆனைமுன் செல்ல
அரிவையர் ஆடிச்செல்ல
மஞ்சள் பெட்டி கொண்டு
மங்கையர் தொடர்ந்து வர
கன்னிய ரெல்லாங் கூடி
களியலோடு கும்மி பாட
தன் மக்கள் வீதி காணத்
தாயவள் புறப்பட்டாளே!

சனி, 4 ஏப்ரல், 2009

குரு வணக்கம்.


குரு வணக்கம்.
வாழ்வே மாயமென்ற
வன்முனிகள் நாட்டினிலே
வாழ்வு ஒரு கலையென்ற
வண்ணமுனி வாழியவே!!
ஊழ்வினைகள் நீங்கிடவே
உந்தன் பதம் வந்தடைந்தேன்
எந்தன் பணி ஏற்றுக் கொண்டு
எழுதும் பணி காத்திடுவாய்.!!

தமிழ்த் தாய்க்கு வணக்கம்


தமிழ்த் தாய்க்கு வணக்கம்
தென்மலை பிறந்து வையம்
தேரா விடமெலாம் பரந்து
என்றும் இளங்கன்னி யெனப் பெயர் கொண்டு
குன்றாடும் குமரன் திருநாட்டில்
மன்றம் கொண்ட மலைமகளே!!
வென்றாடும் வேங்கைய ரெல்லாம்
கன்றாகினர் உன்தனைக் கொண்டாடிடவே!!
மதியிலாச் சிறியேன் நின்னைக்
கதியென வந்து நின்றேன்
காத்தருள்வாய் தமிழ்மகளே!!

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

பாயிரம்

செல்வ விநாயகர் காப்பு
வருவினை முதலிரு வினை நீக்கி
வரந்தரவே சுப்பிரமணிய
புரத்தமர்ந்த செல்வ விநாயகனே!!
அறந்தருந் தேவியுமைத் தலைமகனே!!
எளிய மகன் தமிழி னிக்க
ஏற்றகுரு நீயென வந்தேன்
கற்ற பிழைபொறுத்து இந்நூலை
வெற்றி வழி கொண்டு நிற்க.!







செல்வ முருகன் காப்பு
செந்தமிழ் தந்த செல்வ முருகா!!
சந்தங்கள் தந்தெமை யாண்டு
பொங்கு தமிழுக் கென்பணி
சங்கமென முழங்க
இங்கெழுந் தருள் செய்க!






தேவி முத்தாரம்மை காப்பு
காலத்தே யெமை ஈர்த்தெந்தன்
காரியங்கள் நோக்கிக் கொண்டு
எக்கணமும் எமைப்பிரியா
முக்கண்ணன் துணையாளே!!
முத்தமிழும் நீ தருவாய்
முத்தார தேவி யுந்தன்
பித்து மகன் வேண்டுகின்றேன்
காத்தருள வேண்டு மம்மா!!